திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் பழனி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இவரை நம்பி பலரும் பணம் செலுத்திய நிலையில் யாருக்கும் திருப்பித் தராமல் திடீரென ஏலச்சீட்டு கம்பெனியை இழுத்து மூடிவிட்டு, திருப்பத்தூரில் செட்டில் ஆகியுள்ளார். இதுதொடர்பாக, பல இடங்களில் புகார் அளித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுப்பேட்டை, ராஜா வீதி பகுதியில் அமைந்துள்ள திருநாராயணசாமி திருக்கோவிலின் அறங்காவலராக பழனி நியமிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்து முறையிட்டுள்ளனர்.
ஆனாலும், கோயில் நிர்வாகம் மக்களின் புகாருக்கு செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக வெலக்கல்நாத்தம் செல்லும் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘புதுப்பேட்டை, ராஜா வீதி பகுதியில் உள்ள திருநாராயணசாமி திருக்கோவிலின் அறங்காவலர் பதவியில் இருந்து பழனியை நீக்க வேண்டும். பொதுமக்களிடம் ஏலச்சீட்டு மோசடி செய்த பழனி கோயில் அறங்காவலரா?’ என கேட்டு முழக்கமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து நாட்டறம்பள்ளி காவல்துறையினர் மற்றும் தாசில்தார் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். பின்னர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.