கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய கீழக்குறிச்சி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமலேயே குடிநீர் சேமிக்கப்பட்டு கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் அசுத்தமாக வருவதாகவும், குடிக்க உகந்ததாக இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே குடிநீரை கிராம மக்கள் பயன்படுத்த முடியவில்லை எனக் கூறி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனாலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது ‘உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் வழங்க வேண்டும்’ என கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.