சென்னை உள்ளிட்ட நகரங்களில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மெட்ராஸ் ஐ பரவல் பற்றின ஆய்வும், கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவமனையில் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார்.
அங்குள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அப்போது, நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தலே குடும்பம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது. மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.