மயிலாடுதுறை: 4 மணி நேரம் மக்கள் சாலை மறியல் - என்ன நடந்தது?

மயிலாடுதுறையில் உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கக் கோரி கிராம மக்கள் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது
அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீராநல்லூர் கிராமம், மேலத்தெருவை சேர்ந்தவர் அரவிந்தராஜ் (22). இவர், மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவர், சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும்பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இறந்த அரவிந்த்ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவரது உயிரிழப்புக்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சீர்காழி- மயிலாடுதுறை இடையே போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் தி.மு.க 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் கிராம மக்கள் சாலை மறியல் செய்வது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்தார்.

பின்னர், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து சீர்காழி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், ‘உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ஏழரை லட்சம் நிவாரணம் வழங்கப்படும்’ என உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com