காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் வழக்கமாக நடைபெறும் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று நடைபெறாமல் மாற்று இடத்தில் நடைபெறுவதால் மனு அளிக்க வந்த மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் ஒவ்வொரு மாதமும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் வருகைப்புரிந்து குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளிப்பர்.அவ்வாறு பொது மக்களால் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட அந்தந்த துறை அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியர் அம்மனுக்களை அளித்து பரிந்துரைப்பார்.
இந்நிலையில், இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு நிறைவாக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.அதற்கான பேனர் மட்டுமே அங்கு வைக்கப்பட்டுள்ளது.ஆனால் இன்றைய தினம் நடைபெறும் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டமானது இடம் மாற்றம் செய்யப்பட்டு அருகே இருக்க கூடிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெறுகிறது.
ஆனால், இதுகுறித்து எவ்வித அறிவிப்பு பலகையை ஏதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் நல்லுறவு கூட்டரங்கு முன்பு வைக்கப்படாததால் வழக்கம் போல் இன்று மனு அளிக்க வந்த ஏராளமான பொதுமக்கள் மக்கள் நல்லுறவு கூட்டரங்கிற்கு வருகைப்புரிந்தப் போது அங்கு கூட்டம் நடைபெறாததால் குழப்பம் அடைந்து அலைக்கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு பாதிப்படைந்தனர்.அதேபோல் அரசு அதிகாரிகள் பலரும் அதிகாரிகள் கூட்டம் நடைபெறும் இடம் தெரியாமல் சிரமமடைந்து பாதிப்புக்குள்ளாகினர்.
மேலும் அருகில் இருந்தவர்களுடம் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் எங்கு நடைபெறுகிறது என தகவல் கேட்டறிந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
இவ்வாறாக கூட்டம் மாற்று இடத்தில் நடைபெறும் பொழுது அதற்கான உரிய அறிவிப்பு பலகையை மாவட்ட நிர்வாகம் முறையாக வைத்திட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.