சந்திரபாபு நாயுடு கைது: தமிழக எல்லைப்பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தம்- பொதுமக்கள் அவதி

போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
பேருந்துகள் நிறுத்தி வைப்பு, பயணிகள் அவதி
பேருந்துகள் நிறுத்தி வைப்பு, பயணிகள் அவதி

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா எல்லைப் பகுதிகளான காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், மேட்டூர், ஈரோடு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் வழியாக அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு இயக்கப்படுகிறது. குப்பம், சித்தூர், பலமனேரி, திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழகம் ஆந்திரா இடையே பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இன்று அதிகாலை முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டம் பரபரப்பு நிலவுவதாலும், சந்திரபாபு நாயுடுவின் தொகுதி குப்பம் பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து அரசு பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் ஆந்திரா- தமிழகம் எல்லையான காளி கோயில் வரை இயக்கப்படுகிறது.

இதனால் ஆந்திரா தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். அன்றாட பணி நிமித்தமாக செல்பவர்களும் கோவிலுக்கு செல்பவர்களும் கிருஷ்ணகிரி வரை வருகை தந்து, பின்னர் ஏமாற்றத்துடன் மாற்று பேருந்தில் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர். மாநில எல்லையில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

காஞ்சீபுரம்:

ஆந்திர மாநிலத்தில் மிக முக்கிய கோயில் ஸ்தலமான திருப்பதி அமைந்துள்ளதால், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து திருப்பதிக்கு பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன.

அவ்வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரியில் இருந்து திருப்பதிக்கு 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிகின்றன. இன்று அதிகாலையிலேயே சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு பேருந்துகள் மட்டுமில்லாது தனியார் பேருந்துகளும் திருத்தணி வரையே இயக்கப்படுகின்றன. அதன் பிறகு பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்ட பின் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிய வருகிறது.

இன்று சனிக்கிழமை என்பதால் திருப்பதி செல்ல பக்தர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்த நிலையில், பேருந்துகள் திருப்பதிக்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டதால் பேருந்து நிலையத்தில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

காஞ்சீபுரத்திலும் பேருந்துகள் நிறுத்தி வைப்பு
காஞ்சீபுரத்திலும் பேருந்துகள் நிறுத்தி வைப்பு
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com