செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (30). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (24). தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் மூத்த குழந்தையான கனிமாறனுக்கு அடிக்கடி சளி பிடித்து வந்துள்ளது. இதனால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் மாற்றி மாற்றி சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி மீண்டும் குழந்தை கனிமாறனுக்கு சளி அதிகமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு குழந்தை கனிமாறனுக்கு குழந்தைகள் நலப் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று மதியம் 12 மணிக்கு திடீரென குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி குழந்தையின் உடலை பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
மேலும் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் குழந்தை உயிரிழந்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இதனால் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் தவிர்க்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.