பரமக்குடி அருகே உள்ள முத்துச் செல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டீன் (35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அங்கு ரூ. 5 கோடி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து அகஸ்டினின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நகை கடைகளில் அகஸ்டின் நகைகள் வாங்கியதாகத் தெரியவந்தது.
நேற்று, பரமக்குடி காமராஜர் தெருவில் உள்ள அகஸ்டின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மேலக்காவனூர் கிராமத்தில் அகஸ்டின் மனைவியின் தாயார் ஜெயராணி வீட்டிலும் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, காமராஜர் தெருவில் உள்ள வீட்டில் ரூ 2.50 லட்சம் மற்றும் 10 பவுன் நகையும் கைப்பற்றப்பட்டது.
மேலக்காவனூர் அகஸ்டின் மாமியார் வீட்டில் 200 பவுன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அகஸ்டின் தாயார் மற்றும் தம்பியிடமும், மாமியார் ஜெயராணி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தகவல் தெரிந்த அகஸ்டின் தலைமறைவாகியுள்ளார். பணியாற்றி வந்த நிறுவனத்தில் ரூ.5 கோடியை முறைகேடு செய்து, நகைகளை வாங்கி குவித்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.