குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் தாமரேசன், இவரது மனைவி சரோஜா ஆகியோருக்கும் இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயன் என்பவரது மனைவி சபிமோள் என்பவருக்கும் இடையே சொத்து சம்பந்தமான தகராறு இருந்து வருகிறது.
சொத்து பிரச்னை என்பதால் அதை தீர்த்து வைக்குமாறு கிள்ளியூர் தாலுகா சர்வேயரிடம் சபிமோள் மனு அளித்திருந்தார். இதையடுத்து கிள்ளியூர் தாலுகா சர்வேயர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தபட்ட இடத்தை அளந்து கல் நட்டுவைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த எல்லைக்கல்லின் அருகே கிடந்த கம்புகளை அகற்ற சபிமோள் மற்றும் அவரது கணவர் ஜெயன், உறவினர் ராஜேஷ் ஆகியோருடன் வந்தபோது அதை கவனித்த சரோஜாவும் அவரது கணவருடம் வந்து அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு சபிமோள் மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாஜகவைச் சேர்ந்த சாவர்க்கர் ஆகியோரை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் ஆகியோர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் சரோஜாவின் வயிற்றில் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் சரோஜா கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தாக்குதல் சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சரோஜா களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர், ஊராட்சி தலைவர் சசிகுமார், ராஜேஷ், சபிமோள் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் சபிமோள் தரப்பிலும், சரோஜா தன் கணவருடன் சேர்ந்து தன்னை தாக்கி விட்டதாக புகார் செய்தார். அந்த புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் சரோஜா, கணவர் தாமரேசன், தாணுமாலயன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் முன்சிறை ஊராட்சி கவுன்சிலர் சாவர்க்கர், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் தலைமறைவாயினர்.
தலைமறைவான இருவரையும் கைது செய்ய பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று இரவு சசிகுமார் அதங்கோடு பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சசிகுமாரை கைது செய்து களியக்காவிளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையறிந்த பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல் நிலையத்தின் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் களியக்காவிளை காவல் நிலையத்தின் முன் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.