சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி மன்ற தலைவராக பாமகவை சேர்ந்த சேர்ந்த மேகலா மணிகண்டன் உள்ளார். இந்த ஊராட்சி மன்றத்தில் 12 உறுப்பினர்கள் உள்ளது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த தனியார் பிரீமியம் சிட்டி என்ற நிறுவனத்தின் சார்பில் மகுடஞ்சாவடி அருகே உள்ள எர்ணாபுரத்தில் சுமார் 5.06 ஏக்கரில் உள்ள வீட்டு மனை நிலத்திற்கு அப்ரூவல் செய்வதற்காக மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டு அதற்கான உத்தரவை பெற்றுள்ளனர்.
இதற்காக பீரிமியம் சிட்டி உரிமையாளர் கார்த்திகேயன் ஊராட்சி தலைவரை அடிக்கடி சந்தித்து உள்ளார். மேலும் நிலத்தை அப்ரூவல் செய்வதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிகண்டன் ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் என நிர்ணயம் செய்து, மொத்த நிலத்திற்கும் சேர்த்து அப்ரூவலுக்காக ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பிற்கு டீலிங் செய்து முடிக்கபட்டது.
பணம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் இதை பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை கார்த்திகேயனிடம் நாங்கள் கொடுக்கும் பணத்தை ஊராட்சி தலைவர் கணவருக்கு கொடுக்கவும் என்று சொன்னது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 25 லட்சம் ரூபாய் முன் பணம் தருவதாக கூறியிருந்த நிலையில், தற்போது 5 லட்சம் ரூபாய் முன்பணம் தருவதாக முடிவானது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்தே ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிகண்டன், உடன் அவரது உதவியாளர் ஆனந்த் என்பவரும் இருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மணிகண்டனையும், உதவியாளரையும் கைது செய்தது.
தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிகண்டன் மற்றும் உதவியாளர் ஆனந்த் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தியது. பின்னர் மணிகண்டன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பாமகவை சேர்நதவர் மணிகண்டன். இவரது மனைவி மேகலா தான் பஞ்சாயத்து தலைவர் என்றாலும் மணிகண்டன் தான் அங்கு எல்லாமே. சிறந்த பஞ்சாயத்து என தமிழக அரசிடம் விருது வாங்கியது. இப்போது மணிகண்டன் செயலால் கெட்ட பேர் வாங்கிவிட்டது என்கின்றனர் கிராம மக்கள்.