திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பழநி முருகன் கோவிலின் மூலவர் சிலை பல விதமான மூலிகைகளைக்கொண்டு போகர் தன் கையால் செய்த சிலையாகும்.
ஆனால் முருகனின் தலையில் இருக்கின்ற ருத்ராட்ச மாலை, கண், மூக்கு, வாய், கை விரல்கள் என அனைத்தும் உளி கொண்டு செதுக்கியதை போல் காட்சி தருவது இந்த சிலையின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் படிப்பாதையில் சூடம் ஏற்றக்கூடாது. கோயில் வளாகத்தில் டிரம் செட் அடிக்கக்கூடாது மற்றும் கைலி அணிந்து வரக்கூடாது என குறிப்பிட்டு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாற்று மதத்தை சேர்ந்த சிலர் வின்ச் ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை கோயில் பணியாளர்கள் கண்டுபிடித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பழநி முருகன் கோயிலுக்கு இந்துக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர் என திடீரென பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பேனரில் ‘இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’ என கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதன் பின்னர் இந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே பேனர் வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அகற்றிய பழநி கோவில் நிர்வாகத்தை கண்டித்து மின் இழுவை ரயில் முன் ஏராளமான இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.