பழனி: முருகன் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறி விழுந்த தாலி சங்கிலி: பக்தரை நெகிழச் செய்த அறங்காவலர் குழு

1.3/4 பவுன் தங்கச் செயினையும் சேர்த்து தவறுதலாக உண்டியலில் செலுத்தி விட்டார்.
பக்தருக்கு தங்கச் செயினை வழங்கும் அறங்காவல்ர் குழு
பக்தருக்கு தங்கச் செயினை வழங்கும் அறங்காவல்ர் குழு

பழனி முருகன் கோவிலில் கேரள பக்தர் இரண்டு பவுன் மதிப்பிலான தங்கச் செயினை தவறுதலாக உண்டியலில் போட்டனர். அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் இரண்டு பவுன் தங்க சங்கிலியை கேரள பக்தருக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து பழனி முருகனின் தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.

இந்நிலையில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த சசிதரன்பிள்ளை மகளான சங்கீதா. இவர் மலைக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே செல்லும் வழியில் உள்ள உண்டியலில் சுவாமி மீது கொண்ட பக்தி பரவசத்தின் மிகுதியால் துளசி மாலையை கழற்றி உண்டியல் செலுத்த எடுத்தபோது அத்துடன் அணிந்திருந்த சுமார் 1.3/4 பவுன் தங்கச் செயினையும் சேர்த்து தவறுதலாக உண்டியலில் செலுத்தி விட்டார்.

இது குறித்து கேரள பக்தரான சங்கீதா கோவில் நிர்வாகத்திடம், ‘’நாங்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். எங்கள் குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலை கருத்தில் கொண்டு தவறுதலாக உண்டியல் செலுத்தப்பட்ட தங்க செயினை திரும்ப வழங்கவேண்டும்’’என்று கடிதம் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து கோவில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், 1975 சட்டப்படி உண்டியலில் விழுந்த பொருட்கள் திரும்ப வழங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லாத நிலையில் கேரள பக்தரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருக்கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் சந்திரமோகன், தனது சொந்த செலவில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17 புள்ளி 460 கிராம் எடையில் தங்கச் செயினை கேரள பக்தர் சங்கீதாவிடம் வழங்கியுள்ளார். செயினை பெற்றுக்கொண்ட சங்கீதா குடும்பத்தினர் திருக்கோயில் தலைமை அலுவலகம் வந்து பெற்றுக் கொண்டனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com