காய்ந்து வரும் பாய் நாற்றாங்கால்: அப்போ 250 ஏக்கர் இப்போ 20 ஏக்கர்: ஆர்வம் காட்டாத விவசாயிகள்.. காரணம் என்ன?

நாற்று நடுவற்கு முன்பே காய்ந்து வரும் பாய் நாற்றாங்கால். விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் 250 ஏக்கரில் செய்யப்பட்ட நாற்றங்கால் தயாரிப்பு தற்போது வெறும் 20 ஏக்கரில் மட்டுமே நடைபெறுகிறது.
காய்ந்து வரும் பாய் நாற்றாங்கால்
காய்ந்து வரும் பாய் நாற்றாங்கால்

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5.28 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி நீரின்றி கருகி வருகிறது.

இதனால் குறுவை அறுவடை செய்ய முடியுமா என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் சம்பா சாகுபடிக்கான காலம் தொடங்கி விட்டதால், பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்காமல் உள்ளனர். காவேரியில் போதிய தண்ணீர் இல்லாதாலும், பருவமழை இன்னும் தொடங்காததாலும் சம்பா சாகுபடி தொடங்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

காய்ந்து இருக்கும் பாய் நாற்றாங்கால்
காய்ந்து இருக்கும் பாய் நாற்றாங்கால்

இதனால் சம்பா சாகுபடிக்காக தஞ்சை மாவட்டம் களிமேடு அருகே பாய் நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு இதே நாளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் கிலோ விதை வாங்கி பாய் நாற்றாங்கால் தயார் செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்தோம்.

ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் யாரும் நாற்றங்காலுக்கு முன்பதிவு இதுவரை செய்யவில்லை. இதனால் வெறும் 20 ஏக்கரில் 400 கிலோ விதை வாங்கி மட்டுமே பாய் நாற்றங்கால் தயார் செய்துள்ளோம். ஆனால் அதனை கூட வாங்க விவசாயிகள் இதுவரை வரவில்லை. பாய் நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்பட்டு 30 நாட்கள் மேல் ஆகிவிட்டதால், தற்போது முற்றி காய்ந்து வருகிறது. இனிமேல் இதனை நடவு செய்தாலும் பயிர் வளராது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முற்றிலுமாக காய்ந்த பாய் நாற்றாங்கால்
முற்றிலுமாக காய்ந்த பாய் நாற்றாங்கால்

இந்நேரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் பாய் நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஒருவர் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com