நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலைய சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் என்எல்சி அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி, 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீப்பிடித்ததில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிலர் படு காயமடந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி, என்.எல்.சி. அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர் நித்தியானந்தம் ஆஜராகி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் , காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டதோடு, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதாக கூறினார். இது முற்றிலும் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து தான் என்றும் தெரிவித்தார்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, இதுவரை நான்கு விபத்துகள் நடந்துள்ளதாகவும், என்.எல்.சி. உள்ளே நடக்கும் விவகாரங்களை வெளியிட்டால் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் மிரட்டும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாததும், முறையான விழிப்புணர்வு செய்யாததும் விபத்துக்கான காரணம் என கூறி, முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீக்காராமன், முன் ஜாமீன் வழக்கின் தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கு குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், என்.எல்.சி அதிகாரிகளானகோதண்டம் மற்றும் முத்துக்கண்ணு ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி வழக்கு விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.