அதிமுகவில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாகவே அதிகார போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இரட்டை தலைமை தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஓபிஎஸ் தரப்பினரும். ஒற்றை தலைமை தான் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்ற நிலைப்பாட்டில் இபிஎஸ் தரப்பினரும் விடாபிடியாக நின்று கொண்டிருக்க கடந்த ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தான் என்று முடிவு எடுத்து ஓபிஎஸ்-ஐ அவுமானப்படுத்தி வெளியேற்றினார்கள் இபிஎஸ் அண்ட் கோ.
பெரும்பாலான ஆதரவு இபிஎஸ் தரப்பிற்கு இருப்பதால் சட்ட போராட்டத்தில் இபிஎஸ் அணி வெற்றி பெற்றது. அதன் பின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா மாநாடு வருகின்ற 20ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. அதற்கான பணி இரவு பகல் பாராது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரம் முழுவதும் மதுரைக்கு வரும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியினர் கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், "அதிமுக உண்மை தொண்டர்களை புறக்கணித்துவிட்டு ஆள் கூட்டம் சேர்க்கும் பதவி வெறி பிடித்த பழனிசாமியை மதுரை மண்ணுக்கு வராதே" என குறிப்பிட்டுள்ளது. மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற இன்னும் இரு தினங்களில் உள்ள நிலையில் கண்டன சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.