நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளார் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. எதற்காக ரஜினியை சந்தித்தார், கண்டிப்பாக அரசியல் காரணம் இல்லாமல் இருக்காது என்று பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி சமீபத்தில் தான் இமயமலை பயணம் மேற்கொண்டார், அதை தொடர்ந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள், பழைய நண்பர்கள் சந்திப்பு, சினிமாவிற்கு முன் நடத்துநராக பணிபுரிந்த பஸ் டிப்போவுக்கு மீண்டும் சென்றது, கிருஷ்ணகிரியில் உள்ள பெற்றோர் மணிமண்டபத்துக்கு சகோதரருடன் சென்று வணங்கியது உள்ளிட்ட பல்வேறு பயணங்களை முடித்து சென்னை திரும்பியுள்ள நிலையில் ஓபிஎஸ் உடனான ரஜினி சந்திப்பு நடந்துள்ளது.
அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் நடிகர் ரஜினி. அப்படி இருக்கையில் ஓபிஎஸ் எதற்கு ரஜினியை சந்தித்தார். ரஜினி மூலம் ஓபிஎஸ் ஆதரவு திரட்ட பார்க்கிறாரா? என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.
இதற்கிடையில் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார். அந்த பயணமும் இன்று தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஒரு வேலை புரட்சிப் பயணத்திற்கு குரல் கொடுங்கள் என்று ரஜினியின் ஆதரவை நாடியிருப்பாரோ என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
அதை தொடர்ந்து "ரஜினி - ஓபிஎஸ் சந்திப்பில் அரசியலுக்கு பஞ்சம் இருக்காது" என்று ஓபிஎஸ் அணியில் இருக்கும் ஜே.சி.டி.பிரபாகர் சூசகமாக பேசியிருப்பதும் இந்நேரத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமும் கூட. கிட்டதட்ட ரஜினி-ஓபிஎஸ் சந்திப்பு ஒரு மணி நேரம் நீண்டிருக்கிறது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் அரசியல் இல்லாமல் இருக்காது என்று பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது குறித்து ஓபிஎஸ் எதுவும் வாய் திறக்கவில்லை. இந்தச் சந்திப்பு எந்தவகை.... அதிர்வேட்டா? புஸ்வாணமா? பொறுத்திருந்து பார்ப்போம்..