ஒரே தேதியில் இரு வேறு கூட்டம்: எடப்பாடிக்கு போட்டியாக ஓபிஎஸ்-ன் அதிரடி அறிவிப்பு

மதுரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இபிஎஸ் தலைமையிலான மாநாடு ஒரு பக்கம், சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் ஓபிஎஸ் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒரு பக்கம் என இரு மாபெரும் கூட்டங்கள் ஒரே தேதியில் நடைபெறவுள்ளன.
ஓபிஎஸ்,இபிஎஸ்
ஓபிஎஸ்,இபிஎஸ்

மதுரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இபிஎஸ் தலைமையிலான மாநாடு ஒரு பக்கம், சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் ஓபிஎஸ் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒரு பக்கம் என இரு மாபெரும் கூட்டங்கள் ஒரே தேதியில் நடைபெறவுள்ளன.

அதிமுக-வில் கடந்த ஓராண்டாகவே அதிகாரப் போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இரட்டைத் தலைமைதான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஓபிஎஸ் தரப்பினரும், ஒற்றைத் தலைமைதான் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்ற நிலைப்பாட்டில் இபிஎஸ் தரப்பினரும் விடாப்பிடியாக நின்று கொண்டிருக்க, கடந்த ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒற்றைத் தலைமைதான் என்று முடிவெடுத்து, ஓபிஎஸ்-ஐ அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள் இபிஎஸ் அண்ட் கோ.

டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம்
டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம்

இதையடுத்து, சட்டப் போராட்டம் மேற்கொண்டார். இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இபிஎஸ் தரப்பில் உள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சொற்ப நபர்களை வைத்துள்ளார் ஓபிஎஸ். இறுதியில், பெரும்பாலான ஆதரவு இபிஎஸ் தரப்பிற்கு இருப்பதால், சட்டப் போராட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. அதன்பின், எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அமைதி காத்தே வந்தது ஓபிஎஸ் கூட்டம். சமீபத்தில், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து கொடநாடு வழக்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி ஓபிஎஸ், டிடிவி இருவரும் இணைந்து மேடையில் முழக்கமிட்டதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசை வலியுறுத்தியும் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா மாநாடு, வருகிற 20ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்க இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான பணி, இரவு பகல் பாராது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மேற்பார்வையில் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மாநாடு என்று இபிஎஸ் அறிவித்துள்ள அதே ஆகஸ்ட் 20ம் தேதி, அவருக்குப் போட்டியாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிப்பார் என்று அறிவித்துள்ளார் ஓபிஎஸ். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பில் இருப்பவர்களோ சொற்ப நபர்கள்... இபிஎஸ் தரப்பில் பெரும் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் போட்டிக்கூட்டம் நடத்துவது தேவைதானா என்று அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

-பிரியதர்ஷினி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com