ஆபரேஷன் கஞ்சா: கஞ்சா சாக்லேட்ஸுக்கு எதிராக கோவை போலீஸின் அதிரடி பாய்ச்சல்

ஆபரேஷன் கஞ்சா: கஞ்சா சாக்லேட்ஸுக்கு எதிராக கோவை போலீஸின் அதிரடி பாய்ச்சல்

கஞ்சாவுக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தை இழந்து, தீவிர நோய்களில் சிக்கியவர்களை ஆபரேஷன் செய்து காப்பாற்றுவது மருத்துவர்களின் வழக்கம். ஆனால் கஞ்சாவையே தடுத்திடக் கோவை மாவட்ட காவல்துறை நடத்தி வரும் ஆபரேஷனில் அதிரடியான ரிசல்ட் கிடைத்துள்ளதுதான் ஹைலைட்டே.

விஷயம் இதுதான்… தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகமிருக்கும் மாவட்டங்களில் கோயமுத்தூரும் ஒன்று. மலை வனம் சூழ்ந்த மாவட்டம் என்பதால் இங்கேயே சில இடங்களில் கஞ்சா பயிர் வளர்ப்பு நடப்பதோடு, அருகிலிருக்கும் கேரளத்திலிருந்தும் எளிதாகக் கடத்தி வரப்படுகிறது என்கிறார்கள். இதனால், கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரும் அதிகம், கஞ்சாவைப் புகைந்து பாழாய்ப் போவோரும் அதிகம். அதிலும் குறிப்பாக இளைஞர்களை, கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து மிகப்பெரிய நெட்வொர்க் இந்த கஞ்சா விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது.

சமீபத்தில் சிட்டியில் நிகழ்ந்த இரண்டு கொலை சம்பவங்களைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய சோதனையில் கிரிமினல்கள் கஞ்சா விற்பனை வாயிலாகவே பணம் சம்பாதித்து, அதை முதலீடாக வைத்துப் பல வகையான கிரிமினல் தனங்களில் ஈடுபடுவது புரிந்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக சுமார் பத்து கல்லூரி மாணவர்கள் ‘கஞ்சா விற்பனை செய்ததற்காக’கைது செய்யப்பட்டனர். இந்த அளவுக்குத் தீவிரமாக கோவையில் கஞ்சா விவகாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ‘ஆபரேஷன் கஞ்சா’எனும் பிளானை இந்த ஒரு வருட காலமும் நடத்தி, கோவை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தி ஒடுக்கிடத் திட்டமிட்டது போலீஸ். அதன் படி கஞ்சா விற்பனை பற்றித் தெரிந்தால் உடனடியாக காவல்துறைகளுக்குத் தெரிவிக்கும்படி 94981 81212 என்ற கட்டுப்பாடு அறை மற்றும் 77081 00100 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தங்களுக்குத் தகவல் கொடுக்கலாம்! என்று அறிவித்தது காவல்துறை.

இதன் விளைவாக கஞ்சா விற்பனை பற்றிப் பல தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையிலும், பல சோர்ஸ்கள் வழியாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கஞ்சா விற்பவர்களுக்கு எதிராக அதிரடி ஆபரேஷனை நடத்தியது கோவை காவல்துறை. அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரையிலான நான்கு மாதங்களில் 146 கஞ்சா வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 196 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 427 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதை காவல்துறை கெத்தாக சுட்டிக்காட்டியுள்ளதோடு, பொதுமக்கள் மேற்படி கட்டுப்பாடு அறை எண் மற்றும் வாட்ஸ்-ஆப் எண்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் தகவல் தரும்படி வலியுறுத்தியுள்ளது.

நடத்தப்பட்ட ஆபரேஷனில் பெருமளவு கஞ்சா சாக்லேட்ஸ்தான் கைப்பற்றப்பட்டுள்ளதாம். கோவை காவல்துறையின் இந்த அதிரடி ஆக்‌ஷன் சிறப்புதான் என்றாலுமே கூட ”கஞ்சா வியாபாரிகள் மிக முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ளனர் என்று சொல்ல முடியாது. மாவட்டத்தின் சில ஸ்டேஷன்களில் காவல்துறையின் கடைக்கண் பார்வை ஆசீர்வாதத்தோடு கஞ்சா விற்பனை சீரும் சிறப்புமாகத் தொடரத்தான் செய்கிறது. இதற்குக் கைமாறாக அந்த போலீஸாருக்கும் ஹெவியான கவனிப்பு தரப்படுகிறது. காவல்துறை உயரதிகாரிகள் இந்த ஒரு சில கருப்பு ஆடு போலீஸாரை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, எந்த பிசிருமில்லாமல் இந்த கஞ்சா ஆபரேஷன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இப்போது பிடிபட்டுள்ளதை விட ஐம்பது மடங்கு அதிகமாகவே கஞ்சா கைப்பற்றப்படும் வாய்ப்புள்ளது” என்கிறார்கள் சமூக நலச் செயற்பாட்டாளர்கள்.- ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com