வாய் பேசாத மகன்..ஆன்லைன் டிரேடிங்கால் கடன்..3 பேரை கொன்று விட்டு விபரீத முடிவு எடுத்த இளைஞர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 பேரை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட திலக்
3 பேரை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட திலக்

சேலம் அருகே ஆன்லைன் டிரேடிங் மூலம் ஏற்பட்ட கடன் மற்றும் வாய் பேச முடியாத மகனின் நிலையால் மனமுடைந்த இளைஞர் 3 பேரை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன்-வசந்தா தம்பதி. இவர்களுக்கு திலக் என்ற மகன் உள்ளார். அவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஆறுவயதில் சாய் கிருஷ்ணா என்ற குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், திலக் சிறிது காலம் வெளிநாட்டில் வேலை வேலை செய்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊர் திரும்பி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் டிரேடிங் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகளவு கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பிறந்த சாய் கிருஷ்ணா என்ற குழந்தை வாய் பேச முடியாத காரணத்தால் தொடர் மருத்துவ சிகிச்சையும் பார்த்து வந்துள்ளார்.இதனால் கடந்த சில மாதங்களாக திலக் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திலக் நேற்று இரவு வீட்டின் மேல் மாடியில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு கீழ் பகுதியில் இருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கும் விஷம் கொடுத்துவிட்டு மேல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரவு விடிந்து பார்த்தபோது, வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, கீழ் மாடியில் தந்தை உயிரிழந்த நிலையில், தாய் உயிருக்கு போராடி உள்ளார். மேல்மாடி சென்ற போது திலக் தூக்கில் தொங்கியபடி இருந்ததோடு அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் இறந்து கிடந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கும், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த வசந்தாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முதற்கட்ட விசாரணையில் திலக் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு ஆன்லைன் டிரேடிங் மூலம் தொழில் செய்ததில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட அதிக அளவில் கடன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், தனது ஒரே மகன் வாய் பேச முடியாமல் இருந்த காரணத்தினால் குழந்தைக்காக பல லட்சங்களை செலவு செய்து பலன் இல்லாமல் போனதால் விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. தான் இறந்தால் தன்னுடைய தந்தை, தாய், மனைவி, மகன் ஆகியோர் அனாதையாகக்கூடும் என கருதி அனைவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com