திருவள்ளூர்: பஞ்சாயத்து துணைத் தலைவர் உள்பட 2 பேருக்கு வெட்டு - அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்

இளங்கோவன், லட்சுமணன்
இளங்கோவன், லட்சுமணன்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (28). டிராக்டர் மெக்கானிக். நெடுவரம்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராகவும் இளங்கோவன் இருந்து வருகிறார்.

இவரது அண்ணன் லட்சுமணன் (30) அருகில் உள்ள தனியார் பள்ளியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். லட்சுமணனுக்கு திருமணமாகி 5 மாத கை குழந்தை உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்றிரவு இவர்களது கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் சில இளைஞர்கள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கிராம மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் துணைத்தலைவர் இளங்கோவன் தனது அண்ணன் லட்சுமணனை அழைத்துக் கொண்டு சோழவரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பிரச்னை குறித்து புகார் கொடுத்துள்ளார்.

உடனடியாக சோழவரம் ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்த இளங்கோவன் தன் அண்ணன் லட்சுமணனுடன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நெடுவரம்பாக்கம் ஊருக்குள் நுழைவதற்கு 200 மீட்டர் முன்பாக 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் லட்சுமணன் முகத்தில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் இளங்கோவன் பலத்த வெட்டு காயமடைந்த நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அலறினர்.

இருவரது அலறல் சத்தம்கேட்ட கிராம மக்கள் மற்றும் கிராமத்தில் இருந்த சோழவரம் காவல்துறையினர் வந்து இருவரையும் மீட்டு நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக இருவரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து லட்சுமணனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. துணைத்தலைவர் இளங்கோவன் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக அதே கிராமத்தை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை துணை தலைவர் காவல்துறையினரிடம் அடையாளம் காட்டியதால் முன் விரோதம் இருந்ததாகவும் அதன் பின்னணியில் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com