சட்டையைக் கழற்றிவிட்டு சட்டைநாதரை பயபக்தியுடன் வழிபட்ட திமுக அமைச்சர்கள் - படம் எடுக்கவிடாமல் தடுக்கப்பட்ட செய்தியாளர்கள்!

மலைக்கோவிலில் உள்ள சட்டைநாதரை வழிபடும்போது உடம்பில் சட்டை போடக்கூடாது; சட்டையை கழற்றித்தான் சுவாமியை வழிபட வேண்டும் என்ற மரபின்படி அமைச்சர்களும் தங்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டு கடவுளரை பயபக்தியுடன் வணங்கினர்.
கோயிலில் வழிபட்ட திமுக அமைச்சர்கள்
கோயிலில் வழிபட்ட திமுக அமைச்சர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள மலை மீது தோணியப்பர் உமா மகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர்.

சிறப்புமிக்க இந்தக் கோயிலில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி மேயர் அன்பழகன் ஆகியோர் வருகை புரிந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் குமர கட்டளை தம்பிரான் சுவாமிகள் பூர்ண கும்பம் மரியாதை அளித்து வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள் சட்டைநாதர் சுவாமி, பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்மன், மலைக்கோவிலில் வீற்றிருக்கும் சட்டைநாதர் சுவாமி ஆகிய சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

அமைச்சர்கள் கோவிலுக்குள் நுழையும் போதே திமுகவினர் நிருபர்களிடம் போட்டோ எதுவும் எடுக்கவேண்டாம் என உத்திரவிட்டுக்கொண்டே இருந்தனர். மலைக்கோவிலில் உள்ள சட்டைநாதர் சுவாமியை வழிபட அமைச்சர்கள் சென்ற போது முக்கிய திமுக பிரமுகர்கள் மட்டுமே மேலே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நிருபர்களுக்குக் கூட அனுமதியில்லை.

கோயிலில் திமுக அமைச்சர்கள்
கோயிலில் திமுக அமைச்சர்கள்

மலைக்கோவிலில் உள்ள சட்டைநாதரை வழிபடும்போது உடம்பில் சட்டை போடக்கூடாது. சட்டையை கழற்றித்தான் சுவாமியை வழிபட வேண்டும் என்பது மரபு. அமைச்சர்களும் தங்கள் சட்டையை கழற்றிவிட்டு சுவாமியை பய பக்தியுடன் வணங்கினர். பின்னர் கோயில் சார்பில் அமைச்சர்கள் மற்றும் மேயருக்கு சுவாமி படங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ஆட்சி உள்ளவரை, அதிலும் அமைச்சர் பதவி உள்ளவரை எந்தவித தேவையில்லாத சட்ட சிக்கலிலும் சிக்கிவிடக்கூடாது என்றும் வேண்டிக் கொண்டிருப்பர்களோ? என்றபடி கோயிலுக்கு வந்த பக்தர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

திமுக அமைச்சர்கள்
திமுக அமைச்சர்கள்
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com