நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் . 65 வயதான இவர் ஆடு, மாடுகளை வைத்துகொண்டு இவரது விவசாய நிலத்தில் குடியிருந்து உள்ளார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
நேற்று இவரிடம் அன்றாடம் பால் வாங்குபவர்கள் பால் வாங்க வந்திருக்கார்கள். அப்போது இவர் நிர்வாண நிலையில் தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். உடனே பள்ளிபாளையம் போலீஸார் பிணத்தை கைப்பற்றி, மோப்ப நாய் சகிதம் விசாரணையை தொடங்கினார்கள். பழனியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இதே மாதிரி பள்ளிபாளையம் பகுதியில் பாவயம்மாள் என்கிற பாட்டி கரும்பு காட்டுக்குள் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார். அவரும் வட்டிக்கு விடும் தொழில் செய்து கொண்டிருந்தார். ரெண்டு சம்பவத்தையும் செய்தது ஒரு கும்பலா என்ற அதிர்ச்சி ஏரியாவில் பரவி வருகிறது.
ஏரியா பொதுமக்களிடம் பேசினோம். ”ரெண்டு சம்பவமும் ஒரே மாதிரி நடந்திருக்கு. அதுலயும் குற்றவாளி அகபடல. நிர்வாணமா கிடக்கிறாங்க. பழனியம்மாள் கற்பழிச்சிதான் கொலை செய்யப்பட்டிருக்காங்க. கிழவிய கற்பழிச்சி கொலை செய்யற அளவுக்கு காலம் கெட்டு கிடக்கு. காட்டில தனியா இருக்கிற வயசான அம்மாக்களை பசங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வர ஆரம்பிச்சிட்டாங்க.”என்கிறார்கள்.
பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமாரிடம் பேசினோம். ”பி.எம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் பேச முடியும். இரு சம்பவமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்.” என்றார்.