கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர், ராமநாதபுரம் ஏர்வாடிக்கு செல்வதற்காக தேனி வழியாக வந்துள்ளார். வரும் வழியில் தேனி பஸ் நிலையத்தில் இறங்கிய சித்திக் சாப்பிட அருகில் இருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த நரிக்குறவர் பெண்கள், சிறுவர்கள் சித்திக்கிடம் பிச்சை கேட்டுள்ளனர். ஆனால் பிச்சை தர மறுத்த சித்திக் அவர்களை ‘ஓட்டலுக்கு வந்து சாப்பிடுங்கள். நான் பணம் தருகிறேன்’ எனக் கூறி சாப்பிட அழைத்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர். இதைப் பார்த்ததும் மேலும் சில நரிக்குறவ சிறுவர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர். அவர்களுக்கும் தயங்காமல் சித்திக் உணவு வாங்கி கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்து மேலும் 2 பேர் சாப்பிட ஓட்டலுக்கு வந்ததால் டென்ஷன் ஆன ஊழியர்கள் அவர்களுக்கு ‘உணவு கொடுக்க முடியாது’ என்று மறுத்ததுடன், அவர்களை வேறு ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு சித்திக்கிடம் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த சிறுவர்களோ, முதியவர் சித்திக்கிடம் உணவு வாங்கித் தருமாறு கேட்டபடி ஓட்டலுக்கு முன்பாக நின்றபடி கெஞ்சியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் சித்திக்கிடம் ‘உன்னால்தானய்யா இவனுங்க வரானுங்க. நீ, போ..’ என கூறி சித்திக் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் அடைந்த சித்திக் பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நரிக்குறவர்கள் இன சிறுவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்த ஒரே காரணத்துக்காக கேரள முதியவரை ஓட்டல் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தேனியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.