தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு சலவை தொழில் செய்துகொண்டே பிச்சை எடுத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதன் பிறகு தன்னுடைய 3 பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி முழுநேர பிச்சைக்காரர் ஆனார். மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை எடுத்த பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது உள்பட பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சேவை செய்து வருகிறார்.
கொரோனா நோய் பரவல் காலத்தில் எல்லோரும் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நிதியளித்தபோது இவர் யாசகம் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்து பலரையும் அசரவைத்தார்.
அந்த நேரத்தில் பூல்பாண்டிக்கு கிடைத்த மரியாதை அவருக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியதால் பிச்சை மூலம் கிடைத்த பணத்தை கொரோனா நிதி, இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி போன்றவற்றுக்கு பூல்பாண்டி வழங்கி வருகிறார்.
அந்தவகையில் யாசகம் பெற்ற பணத்தில் இருந்து இதுவரை பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அளித்த நிதி 55 லட்சத்தை தாண்டும் நிலையில் தற்போது தன் வசம் சேர்ந்துள்ள பத்தாயிரம் ரூபாயை கொண்டு வந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் கையில் ஒப்படைத்து, ‘இதை முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்த்து விடுங்கள்’ என்று தந்துவிட்டு போனார்.
கலெக்டர் அலுவலகத்தில் காவி வேட்டியில் முகத்தில் நீண்ட தாடியுடன் இருந்த பூல்பாண்டியையும், அவரது செயலையும் பார்த்து மனு கொடுக்க வந்த பெண்கள் வியந்ததோடு அவரது காலில் விழுந்து ஆசி பெற்று சென்றது சற்று வித்தியாசமாக இருந்தது.
- ஷானு