மயிலாடுதுறை அருகே 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 63 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது (வயது 63). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை 6- ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியிடம் அவரது தாயார், கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி உள்ளார். பெட்டி கடைக்கு சென்ற சிறுமி பால் பாக்கெட் கேட்டு உள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு சாக்லேட்டுகளை கொடுத்து ஆசை வார்த்தை கூறி கடைக்குள் அழைத்துச் சென்ற பஷீர் அகமது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அந்த சிறுமியிடம் வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமி தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் பஷீர் அகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-ஆர் விவேக் ஆனந்தன்