காரைக்குடி அம்பாள்புரம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவகங்கள் அதிகளவில் உள்ளன. இந்த இடங்களில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் பிரியாணிக்கு பிரபலமான இந்த 2 உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில் அதிகாரிகள் திடீரென ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த இரண்டு உணவகங்களிலும், கெட்டுப்போன இறைச்சி மற்றும் மசாலாவை பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இரு உணவகங்களின் குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்த கெட்டுப்போன 80 கிலோ ஆடு, கோழி இறைச்சி மற்றும் மசாலா பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் மது பாரிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 10 கிலோ கோழிக்கறி மற்றும் உணவுப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, உணவுப்பொருட்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடத்தில் கொட்டி அழித்தனர். மேலும் உணவகங்கள் மற்றும் மது பார் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து சென்றனர்.
- கோபிகா ஸ்ரீ