வாணியம்பாடியில் திரும்பிய திசை எல்லாம் அரசு அனுமதியில்லாத டாஸ்மாக் பார் இயக்கப்பட்டு வந்ததை கண்ட அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை பின்புறமாக அனுமதியின்றி டாஸ்மாக் பார் இயங்கி வந்தது.
இங்கு, மது அருந்திவிட்டு மதுப்பிரியர்கள் அட்டகாசம் செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்டம் கலால் உதவி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கலால் உதவி ஆணையர் பானுமதி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறைனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, அங்கு யாரும் இல்லாத காரணத்தினால் அங்கு டாஸ்மாக் பார் இயங்கி வந்ததற்கான அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடப்பதை கண்டறிந்து டாஸ்மாக் பார் அருகே பூட்டபட்டிருந்த அறைக்கு சீல் வைத்தனர்.
டாஸ்மாக் கடை பெயர் அச்சடிக்கப்பட்ட பேனர்களை கிழித்து ஏறிந்தனர். மேலும், அங்கு பார் நடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், ஆம்பூர் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பின்புறம் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த சட்டவிரோத டாஸ்மாக் பாரை நகர காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.