அரிசியுடன் பயனாளி
அரிசியுடன் பயனாளி

திண்டுக்கல்: ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்? - அதிகாரிகள் விளக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் வீடியோ வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே உள்ள சிங்காரகோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடைக்குச் சென்று அரிசி வாங்கியுள்ளனர்.

பிறகு அந்த அரிசியை வீட்டுக்கு கொண்டு வந்து பார்த்தபோது கலப்படம் இருந்ததாகவும், தண்ணீரில் ஊற வைத்தபோது அரிசியானது ரப்பர் போல் கறைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து வேடசந்தூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு, ‘ரேஷன் அரிசி வேண்டாம். மாடுகள் கூட சாப்பிட முடியாத அளவு உள்ளது. இது மாதிரி அரிசியை கொண்டு வந்தால் வாகனத்தை பிடித்து வைப்போம்’ என பேசி வீடியோ வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், ‘மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது பிளாஸ்டிக் அரிசி கிடையாது. செறிவூட்டப்பட்ட அரிசி. அரிசியை செறிவூட்ட பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

இதில் ஒரு வகையாக, அரிசியின் மேல் தேவையான சத்துகள் பூசி செறிவூட்டப்படுகிறது. இந்த அரிசியை தண்ணீரில் கழுவினாலோ அல்லது ஊற வைத்தாலோ செறிவூட்டிய சத்துகள் நீங்கிவிடும். இதை கண்டுதான் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்றனர்.

இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்தாலும் பொதுமக்கள் மத்தியில் உள்ள ஐயம் நீங்கியபாடில்லை. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு விநியோகிக்க ரேஷன் கடைக்கு தரமான அரிசி கொண்டு வரப்படுகிறதா? என்பதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com