கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளானது. 294 பேரை பலி கொண்ட இச்சம்பவம் நாட்டையும் - நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில்1000-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 800 பேர் பயண முன்பதிவு செய்திருந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், 35 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து ஒடிசா நோக்கி, முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், க.பனீந்திர ரெட்டி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய குழு விரைந்தது. முதற்கட்டமாக விபத்தில் உயிர் தப்பிய 55 பயணிகள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகபயணிகள், நேற்று காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். இந்த சிறப்பு ரயில் பாதராக் பகுதியில் இருந்து புறப்பட்ட நிலையில், பிரம்மாபூர் , விசாகப்பட்டினம் , ராஜமுந்திரி , விஜயவாடா வழியாக இன்று காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது.
சென்னை வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். விபத்தில் உயிர் தப்பிய 137 பயணிகள் சென்னை வந்தடைந்தனர். காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்க 4 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு, ரயில் நிலையத்திலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் விபத்தில் லேசான காயமடைந்த 8 பேருக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ராணுவ வீரர் அனீஷ் உள்ளிட்டோரும் அடங்குவர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக ரயிலில் வரும் பயணிகள் படுகாயம் அடைந்திருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகளை வீடுகளுக்கு அழைத்து செல்ல சிறப்பு வாகனங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.