சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் கேலரியில் இருந்து கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று, அதே கேலரியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டி முடிவடைந்த சில நிமிடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை திடீரென ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
கலைஞர் கருணாநிதி கேலரியில் இருக்கும் உள்அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய பிறகு சபரீசன் தனிப்பட்ட முறையில் உரையாடினார்.
ஏற்கனவே தி.மு.க-வின் ‘பி- டீம்’ என்று ஓ.பன்னீர்செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விமர்சித்து வரும் நிலையில் தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மருமகனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.