”பாஜகவை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; பாஜகவுடன் கூட்டணியில் இல்லை”- பகிரங்கமாகக் கூறிய ஜெயக்குமார்

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை, தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, "பல முறை எச்சரிக்கை கொடுத்தோம் , நிறுத்திகொள்ளுங்கள் என்று சொன்னோம் கேட்கவில்லை. அதிமுக தொண்டர்கள் பொங்கி எழுந்தார்கள் என்றால் தாங்கமாட்டீர்கள். இப்போது எங்களது தொண்டர்கள் அண்ணாமலையை சும்மா விட மாட்டார்கள். இனிமேல் அண்ணாமலையை தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள்.

இனி ஒரு கருத்து கூறினால் ஓராயிரம் கருத்துகள் அண்ணாமலைக்கு வந்து சேரும். அண்ணாமலையை திருத்துங்கள், அவரை பேசவிடாமல் பண்ணுங்கள் என்று பாஜக தலைமையிடம் கூறினோம். இப்படி கூட்டணி கட்சிக்குள் இருந்துகொண்டு இது போல் தலைவர்களை விமர்சித்தால் எப்படி தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.

பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதை ஆனால், அண்ணாமலை விரும்பவில்லை. இந்த கூட்டணியில் இருந்து கொண்டு எங்களது தலைவர்களை விமர்சிப்பீர்கள் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பாஜகவை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு எதற்கு? பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

உங்களது ஓட்டு வங்கி எந்தளவுக்கு உள்ளது என்பது தெரியும். எங்களை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே. கண்டித்து வையுங்கள் என்று மேலிடத்தில் தலைமையிடம் பலமுறை கூறியும் எந்த பலனும் இல்லை. இது போன்று தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், இனியும் பொறுமை கிடையாது. அதனால் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை, தேர்தல் வரும்போது தான் அதை பற்றி முடிவு எடுக்கப்படும்.

ஒரு கட்சியின் மாநில தலைவர் இப்படியா நடந்து கொள்வது, முன்னாள் இருந்த மாநில தலைவர்கள் எல்லாம் இப்படியா இருந்தார்கள். தொல்லியல் துறையில் இருக்க வேண்டியவர் அண்ணாமலை. மாநிலத் தலைவர் என்ற பொறுப்பிற்கு தகுதியில்லாத ஒரு நபர்தான் அண்ணாமலை" என்று திட்டவட்டமாக பேசியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com