நீலகிரி: ’ஹெலிகாப்டரை நிறுத்துங்க சார்’: முதல்வரிடம் ஒரு பரபரப்பு கோரிக்கை
நீலகிரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் ‘ஹெலிகாப்டர் சுற்றுலா’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சூழல் ஆர்வலர்கள் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருவது பரபரப்பாகியுள்ளது.
என்ன விவகாரம்..? நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கிவிட்டது. பல மாநிலங்களை சேர்ந்த மட்டுமல்ல பல தேசங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்து கொண்டுள்ளனர். சுற்றுலாவில் பல புதிய விஷயங்களை புகுத்தி வருவாயை ஈட்டிட தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு நிலையாக இந்த முறை ‘ஹெலிகாப்டர் சுற்றுலா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இம்மாதம் 13ம் தேதியிலிருந்து 30ம் தேதி
வரையில் ஊட்டியில் இதை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மேலே பறந்தபடி இயற்கை மற்றும் வன அழகை ரசிக்கலாம் என்பது திட்டம்.
இந்த நிலையில் இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீலகிரி மாவட்ட சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பிற்கான காரணத்தை விளக்குகையில் “ஊட்டியானது மிக அடர்ந்த வனத்தினால் சூழப்பட்டுள்ள பகுதி. பல வகை வன விலங்குகள், அரியவகை பறவைகள் இவற்றில் வாழ்கின்றன. சுற்றுலா வளர்ச்சி நோக்கில் ஹெலிகாப்டர் இயக்குவதன் மூலம் நேரும் ஒலி மாசினால் வன விலங்குகள் அச்சத்திற்கு ஆளாகும். இதனால்
அவர்களின் இயல்பான வாழ்க்கை ஓட்டம் பாதிக்கப்படும்.
சுற்றுலா பயணிகள் ஊட்டியின் அழகை தெளிவாக ரசிப்பதற்காக ஹெலிகாப்டர்கள் சற்று தாழ்வே பறக்கும். இதனால் உருவாகும் அதீத சத்தம் காரணமாக உருவாகும் மன சஞ்சலத்தால் விலங்குகள் மற்றும் பறவைகளின் இனப்பெருக்க செயல்பாடுகள் தடைபடும். விலங்குகளின் குட்டிகள் அச்சத்தில் பாதிக்கப்படும், பறவைகள் சரியாக தங்களின் முட்டைகளை அடைகாக்க வராது வேறு பக்கம் பறந்துவிடும். இப்படி பல சிக்கல்கள் உள்ளன.இதுமட்டுமில்லாது மலைச்சரிவுகளில் உள்ள அணை மின் நிலையங்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் உள்ள நிலையில் இப்படி ஹெலிகாப்டரை இயக்கி, சுற்றிக்காட்டுவது
தேவையற்ற பின் விளைவுகளுக்கு வாய்ப்பாக அமையலாம். எனவே முதல்வர் இந்த திட்டத்தை தடுக்க வேண்டும்” என்கின்றனர். கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட நிர்வாக தரப்பில் ஹெலிகாப்டர் தரையிறங்கவும், பின் எழும்பி செல்லவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற விஷயங்கள் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் முடிவை சார்ந்தது என்பதால் இதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்களோ? இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல, எல்லா
உயிர்களுக்குமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை.
- ஷக்தி