ஆவடியில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாகப் பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருக்கும் வகையில் "அக்கம் பக்கம் கண்காணிப்பு" என்ற திட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் ஆவடி காவல் ஆணைய இணை இயக்குநர் விஜயகுமார் தலைமையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது
இந்த திட்டத்தின்படி போலீசார் குடியிருப்பு பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணிப்பார்கள். அந்தப் பகுதியில் தகவல் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் குற்றச்சம்பவங்கள் குறித்த தகவல்கள் கண்டறியப்படும். பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பிரச்சனைகள், பாதுகாப்பு, போதைப் பொருள் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தநிலையில் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் துணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று இரவு அய்யப்பன்தாங்கல், போரூர், மவுண்ட் பூவிருந்தவல்லி சாலை, சக்தி நகர், செட்டி தெரு, குன்றத்தூர் சாலை, மதனந்தபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதிவண்டியில் சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
அதிகாலை வரை நீடித்த இந்த மிதிவண்டி ரோந்து மற்றும் ஆய்வின் போது வங்கிகள், ஏடிஎம், தங்கும் விடுதி, நகைக் கடைகள், அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், போலீசாரின் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அந்த வழியாகச் சென்ற கார், இரு சக்கர வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், "ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களால் அக்கம் பக்கம் கண்காணிப்பு என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைகளில் இருக்கின்ற குடியிருப்பு பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்பு, விரிவாக்கப் பகுதிகளில் போலீசார் சைக்கிளில் ரோந்து சென்று அந்தப் பகுதி மக்களிடம் கலந்துரையாடி, குற்றங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாகும்.
குறிப்பாக பொது இடங்களில் மது அருந்துவது, போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்கள் பாதுகாப்பு, மாணவ மாணவிகளின் பாதுகாப்பு, தனியாக வசிக்கும் முதியவர் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டு குற்றங்கள் நடக்காத பகுதியாக மாற்றுவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கோடைக் காலத்தில் பலர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விடுவதால், பூட்டிய வீட்டில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் என்பதால் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் போலீசார் இணைந்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரை ஊக்கப்படுத்தும் வகையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மிதிவண்டியில் சென்று ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.