என்.ஐ.ஏ. அதிரடி! எக்கச்சக்க பரபரப்பு: தேர்தலுக்காக கோவையில் சோதனை அரசியல் செய்கிறதா பாஜக?

அரபிக் கல்லூரியில் அரபி பாடம்தான் நடத்துகிறோமே தவிர வேறேதுமில்லை
என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

கோவையில் சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் துவங்கியுள்ளது தேசிய புலனாய்வு அமைப்பு! எனப்படும் ‘என்.ஐ.ஏ.’வின் ரெய்டு பரபரப்பு. இந்த முறை திமுக பெண் கவுன்சிலரின் வீடு வரையில் ரெய்டு கரங்கள் நீண்டிருப்பதால் பதற்றம் டபுளாகியுள்ளது.

விவகாரம் இதுதான்…

கோவை மாநகராட்சி அலுவலகத்தின் அருகேயுள்ளது கோட்டை ஈஸ்வரன் ஆலயம் எனும் பழமையான சிவன் கோவில். இதன் அருகில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று கார் ஒன்று வெடிக்க, அதன் உள்ளேயிருந்த ஜமேஷா முபின் எனும் இளைஞர் உடல் சிதறி இறந்தார். விசாரணையில் அதன் உள்ளே இருந்தது கிட்டத்தட்ட அசெளம்பிள் செய்யப்பட்ட சிலிண்டர் வெடிகுண்டு, கார் வெடிகுண்டு! என்றார்கள். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வின் கைகளுக்கு உடனடியாக சென்றது.

இத்தனை மாதங்களாக ஜமேஷா முபினை பற்றி அங்குலம் அங்குலமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ., அவரோடு தொடர்பில் இருந்ததாக பல இளைஞர்களை கைது செய்தது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதியன்று மீண்டும் கள விசாரணையில் மற்றும் சோதனையில் இறங்கியது என்.ஐ.ஏ. டீம். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த மிகப்பெரிய டீம்தான் இங்கே சோதனையிட்டது.

கோவை சிட்டியின் கரும்புக்கடை, ஆப்பிள் கார்டன், கோட்டை மேடு, கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வளைத்து வளைத்து சோதனையிட்டனர். தெளிவாக சொல்வதென்றால் கோவையில் 22 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சியின் திமுக பெண் கவுன்சிலரான முபசீராவின் வீடும் அடக்கம். இவரது கணவர் ஆரிப், உக்கடத்தை சேர்ந்த திமுக பிரமுகர் தமிமுன் அன்சாரி ஆகியோர் வீடுகளில் சோதனை செய்தனர். குனியமுத்தூரில் உள்ள அரபிக் கல்லூரியில் ஜமேஷா முபினுடன் படித்தவர்களையும் டார்கெட் செய்து விசாரணை நடத்தப்பட்டது. அரபிக் கல்லூரியில் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சோதனைக்கு பின் என்.ஐ.ஏ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் “இளைஞர்களை மூளைச் சலவை செய்து மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதை முறியடிக்கும் விதமாக தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சோதனையில் ஈடுபட்டோம். இச்சோதனையின் போது மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஹார்டு டிஸ்க்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். உரிய ஆதார ஆவணமற்ற பணமும் பறிமுதலாகியுள்ளது.

பயங்கரவாத செயல்களுக்கு பயிற்சி அளித்துள்ளது தொடர்பான விபரங்கள் இந்த சோதனையின் போது சேகரிக்கப்பட்டன” என்று நீள்கிறது.

இந்நிலையில் இந்த சோதனைகள் மற்றும் விசாரணைகளுக்கு எதிராக கடும் ரியாக்‌ஷன்களை காட்டியுள்ளன இஸ்லாமிய அமைப்புகள் “கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகப்போகிறது. இப்போது இப்படி ரெய்டு நடத்த வேண்டிய அவசியமென்ன? தேர்தல் நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுவதன் விளைவே இது. நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியை பாஜக குறி வைக்கிறது. இங்கே தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்குவதற்காக சிறுபான்மை மக்களான எங்களை டார்கெட் வைத்து டார்ச்சர் செய்கிறார்கள். அரபிக் கல்லூரியில் அரபி பாடம்தான் நடத்துகிறோமே தவிர வேறேதுமில்லை. ஆனால் இவர்களோ பயங்கரவாத பயிற்சி தரப்படுகிறது! என்று பொய் பழியை தூக்கிப் போடுகின்றனர்” என்று ஆதங்கப்படுகின்றனர்.

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com