நெய்வேலி: என்.எல்.சியை கண்டித்து வேலை நிறுத்தம்- தொழிலாளர்கள் எச்சரிக்கை

ஒப்பந்த தொழிலாளர்களை என்.எல்.சி நிறுவனம் மதிக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பேரணியாக் சென்ற என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள்
பேரணியாக் சென்ற என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள்

நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி நிறுவன சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும், பிரதமர் மோடி அறிவித்திருந்த, "ரோஸ்கர் மேளா " திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தரப்படுத்தும் வரை அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும், என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு தகுந்தார் போல் பணி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெய்வேலி பெரியார் சதுக்கத்திலிருந்து, பேரணியாக புறப்பட்டு, என்.எல்.சி தலைமை அலுவலகம் வரை நீதி கேட்டு பேரணியாக சென்றனர்.

பின்னர் என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க சென்றபோது, அலுவலகத்தில் மனுக்களை பெற்றுக்கொள்ள உயர் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தால், மனு அளிக்காமல் திரும்பினர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் சிலர் தெரிவிக்கையில், ஒப்பந்த தொழிலாளர்களை என்.எல்.சி நிறுவனம் மதிக்கவில்லை எனவும், இதனால் அடுத்த மாதத்தில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com