சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் பல இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பழைய விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது. இந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் இன்று 5 ரோடு முதல் ஜங்சன் வரை 9 இறைச்சிக் கடைகள் மற்றும் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் உள்ள 4 இறைச்சிக் கடைகளில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது சுகாதாரமற்ற நிலையில் குளிர்விப்பானில் வைத்திருந்த 45 கிலோ ஆட்டிறைச்சி மற்றும் வெளியில் தொங்க விடப்பட்டிருந்த 15 கிலோ ஆட்டிறைச்சி , 3.5 கிலோ கோழி கறியையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதனையடுத்து இறைச்சிக் கடை உரிமையாளர்களை அழைத்து சுகாதாரமற்ற நிலையில் வெளியில் இறைச்சிகளைத் தொங்க விடக் கூடாது எனவும், துருப் பிடிக்காத கம்பியில் தொங்க விட வேண்டும். அதேபோல் பணியாளர்கள் கையுறை, தலையுறை, ஏப்ரான் அணிந்து பணியாற்ற வேண்டும். கண்ணாடி கூண்டு அல்லது கண்ணாடி போன்ற ஷீட் வைத்துப் பாதுகாப்பாகச் செய்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி சென்றனர்.
மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாத 3 கடைகளுக்குச் சீல் வைத்தனர்.