அழிவின் விளிம்பில் இருக்கும் 'நெட்டி' கலைப் பொருட்கள்: அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கைவினை கலைஞர்கள்

அழிவின் விளிம்பில் இருந்து காக்க வேண்டும் என அரசுக்கு "நெட்டி" கலைப் பொருட்கள் வடிவமைத்து வரும் கைவினை கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராதா-எழில்விழி
ராதா-எழில்விழி

தஞ்சை கலைகளின் பிறப்பிடமாக திகழ்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம் என அனைத்து கலைகளும் தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்த்து வருகிறது. தலையாட்டி பொம்மை, தஞ்சை கலைத்தட்டு, தஞ்சை வீணை உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த வரிசையில் நெட்டி வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்பொருட்களும் ஒன்றாகும்.

புவிசார் குறியீடு பெற்றுள்ள நெட்டியால் செய்யப்படும் கலைப்பொருட்கள் வடிவமைப்பில், ராதா-எழில்விழி தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தா, ராஜமுந்திரி, பொன்னேரி பகுதிகளில் நெட்டிகளை தருவித்து அதனை பதப்படுத்தி அதில் இருந்து கலைப் பொருட்கள் உருவாக்கி வருகின்றனர்.

நெட்டி கைவினை பொருட்கள்
நெட்டி கைவினை பொருட்கள்

ஏரி, குளம் இவற்றில் வளரக்கூடிய தாவர வகையை சேர்ந்தது நெட்டி. பார்ப்பதற்கு யானை தந்தம் போல் காட்சி அளிக்கும். ராதா-எழில்விழி தம்பதியினர் தொடக்க காலத்தில் நெட்டியில் பல வர்ணங்கள் பூசி மாலை செய்துவந்தனர். இந்த மாலை பொங்கல் விழாவில் மாடுகள் கழுத்தில் மாலையாக அணிவிக்கப்படுகிறது. சாஸ்திர முறைப்படி கோவில்கள் தத்ருபமாகவும், கலை நயத்துடனும் செய்து கண்ணாடி பேழைக்குள் வைத்து பரிசுப்பொருட்களாக விற்பனை செய்து வருகின்றனர்.

நுணுக்கமாக நெட்டி கைவினை தயாரிக்கும் ராதா-எழில்விழி
நுணுக்கமாக நெட்டி கைவினை தயாரிக்கும் ராதா-எழில்விழி

உலக அளவில் இவர்களது கை வண்ணத்தில் உருவான கலைப்பொருட்கள் பல தலைவர்களின் அலமாரியில் அலங்கரித்து வருகிறது. தஞ்சை பெரியக்கோவில், கல்லணை, வேளாங்கன்னி பேராலயம், மதுரை மீனாட்சியம்மன், அயோத்தி ராமர், கிருஷ்ணர், வேலு நாச்சியார், பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கார் உள்ளிட்டவற்றை தத்ரூபமாகவும், உருவங்களை சிலையாகவும் நெட்டியில் வடிவமைத்து வருகின்றனர்.

நெட்டி கைவினை பொருட்கள் செய்யும் தம்பதி
நெட்டி கைவினை பொருட்கள் செய்யும் தம்பதி

தர்மபுரி பச்சையம்மன் கோவிலை தத்ரூபமாக செதுக்கி விருது பெற்றுள்ளனர். சப்த முனிஸ்வரர் கையில் வீச்சரிவாளுடன் விழிகளை உருட்டி கம்பீரமாக நிற்கும் சிலை. நெட்டி வேலைப்பாடு கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த பிறகு ஆர்டர் அதிக அளவில் வருவதாக கூறும் கைவினை கலைஞர் எழில்விழி, கற்றுக்கொள்ள யாரும் முன்வராத காரணத்தால் அழிவின் விளிம்பில் உள்ள இக்கலையை அரசு காப்பாற்ற முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com