நெல்லை: திறந்து 8 மாதம்தான் ஆச்சு - அரைமணி நேர மழைக்கே ரூ.14 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் பணால்

மைதானம் சீரமைக்கப்பட்ட 8 மாதங்களிலேயே 14 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வ.உ.சி மைதானம்
வ.உ.சி மைதானம்

பாளையங்கோட்டையில் ரூ.15 கோடி செலவில் அரசின் சார்பில் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள் சீரமைத்தல் ,வணிக வளாகங்கள் விளையாட்டு அரங்குகள் சீரமைப்பது ,போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரங்கத்தைச் சுற்றி இருபுறமும் இருக்கைகளுடன் கூடிய கேலரிகள் மற்றும் நவீன மேற்கூரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் நெல்லை மாநகர் முழுவதும் இடி ,மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. குறிப்பாகப் பாளையங்கோட்டை பகுதியில் காற்று மிகப் பலமாக வீசிய நிலையில் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரியின் மேற்கூரை ஒன்று காற்றில் பெயர்ந்து அடியோடு சரிந்து விழுந்துள்ளது.

மேலும் வழக்கமாகக் காலை மற்றும் மாலை நேரத்தில் மக்கள் இந்த மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். அதே போல் இளைஞர்கள், பெண்கள், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம் சம்பவத்தன்று பிற்பகல் நேரம் என்பதாலும், மழை பெய்த காரணத்தால் மைதானத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

மைதானம் சீரமைக்கப்பட்ட 8 மாதங்களிலேயே 14 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மைதானத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மழை மற்றும் காற்று காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் விசாரணைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com