நெல்லை: பறை இசைக்கருவிகளுடன் பஸ்சில் ஏறிய இளம்பெண் - நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்

பறை இசைக்கருவிகளுடன் நடுவழியில் மாணவியை இறக்கிவிட்ட நடத்துநரின் செயல் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
நடுவழியில் இறக்கிவிடப்பட்ட கல்லூரி மாணவி
நடுவழியில் இறக்கிவிடப்பட்ட கல்லூரி மாணவி

நெல்லை அருகே பறை இசைக்கருவிகளுக்கு பேருந்தில் இடம் இல்லை என்று கூறி கல்லூரி மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். அவர் பயின்ற கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார்.அப்போது அரசு பேருந்தில் தான் வந்துள்ளார். கல்லூரியிலும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து, மாலையில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளைக் கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார்.

பேருந்தில் ஓட்டுநர் அனுமதித்தாலும், பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும் போது டிக்கெட் கேட்க வந்த நடத்துநர், மாணவியை அவதூறாக பேசி பறை இசை கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி பாதி வழியில் இறங்கச் சொல்லி உள்ளார். உடன் வந்த மற்ற பயணிகள் வற்புறுத்தல் காரணமாக பறை இசைக்கருவிகளுடன் சேர்த்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார் நடத்துநர்.

பாதி வழியில் இறங்கி நின்று தனியாக அழுதுக் கொண்டிருந்த மாணவியின் நிலை பரிதாபகரமாக இருந்தது. உடனடியாக மாணவி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் மாணவியை ஏற்றிச் செல்ல பேருந்துகள் எதுவும் வரவில்லை.

அரை மணி நேரத்திற்கும் மேலாக வந்த பேருந்துகளை ஒவ்வொன்றாக நிறுத்தி மாணவியை பேருந்து ஏற்றி விட முயற்சித்தவர்களின் செயல் இறுதியாக பலித்தது. நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து நடத்துநர் பாஸ்கர், மாணவியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மதுரையில் மாணவியை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடுவதாக கூறி பறை இசை கருவிகளுடன் பேருந்தில் ஏற்றிச்சென்றார்.

பறை இசைக்கருவிகளுடன் கல்லூரி மாணவியை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துநரின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com