நெல்லை, மேலப்பாளையத்தைச் சேர்ந்த மகபூப் ஜானின் மகன் இம்ரான்கான், 32 வயது. ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி பெயர் ஹசீனா, 28 வயது. நெல்லை டவுன் முகமது அலி தெருவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஆறு வயதில் அபியா என்கிற மகளும், ஐந்து வயதில் அசரத் என்கிற மகனும் இருக்கிறார்கள். திருமணமாகி ஆறாண்டு காலமாய் எந்த பிரச்சினையும் இல்லாமல் தம்பதிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு இருக்கிறார் இம்ரான்கான். இதனால், அதிருப்தியான ஹசீரா, கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
கடந்த சில மாதங்களாக ஹசீனா தனது தாய் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி மதியம் இம்ரான்கான் டவுனில் உள்ள தனது மனைவி வீட்டிற்குச் சென்றிருக்கிறார். மனைவியுடன் நன்றாகப் பேசி இனிமேல் உன்னைச் சந்தேகப்பட மாட்டேன் என்று கூறி அங்கேயே விருந்து சாப்பிட்டு இருக்கிறார். பின்னர் அவர் தன் மனைவிடம், ’’உன்னைப் பிரிந்து இவ்வளவு நாட்கள் இருந்ததனால் மன அழுத்தமாய் இருக்கிறது. பேட்டை தர்ஹாவுக்குப் போய் தொழுது விட்டு வரலாம். அமைதி கிடைக்கும்’’ என்று கூறியிருக்கிறார். கணவரது பேச்சை உண்மை என நம்பிய ஹசீனா, கணவருடன் மோட்டார் சைக்கிளில் தர்ஹாவுக்குச் சென்றிருக்கிறார்.
அங்கு இருவரும் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ஹசீனா கண்ணை மூடி பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சட்டென இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இம்ரான்கான், ஹசீனாவின் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து விட்டு எஸ்கேப்பாகி இருக்கிறார் இம்ரான்கான். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த ஹசீனாவை அங்கிருந்தோர் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ஹசீனா இறந்து போயிருக்கிறார். மனைவியை கொலை செய்த பின் கத்தியோடு டவுன் போலீசில் சரண் அடைந்திருக்கிறார் இம்ரான்கான். ’’மனைவின் மீது ஏற்பட்ட தீராத சந்தேகத்தினால்தான் கொலை செய்தேன்’’என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் இம்ரான்கான்.