நெல்லை: பல் பிடுங்கிய விவகாரத்தில் அச்சுறுத்தும் போலீஸ்? - விசாரணை அதிகாரியை மாற்றக் கோரிக்கை

ஐ.பி.எஸ் அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதால் ஏ.டி.ஜி.பி விசாரிப்பது சரியல்ல. அவருக்குப் பதிலாக ஐ.ஜி அல்லது டி.ஐ.ஜி அந்தஸ்தில் இருப்பவர்கள் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் சாட்சிகளுக்கு பயம் இருக்காது.
நெல்லை: பல் பிடுங்கிய விவகாரத்தில்  அச்சுறுத்தும் போலீஸ்? - விசாரணை அதிகாரியை மாற்றக் கோரிக்கை

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த ஐ.ஜி அல்லது டி.ஐ.ஜி அந்தஸ்தில் இருப்பவர்கள் விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் போலீஸ் ஏ.எஸ்.பி பல்பீர்சிங் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டுகள் எழந்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 10 போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரித்து அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், 17 வயது சிறுவன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி சங்கர் விசாரணை நடத்தி பல்பீர்சிங் மீது கூடுதலாக 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். மேலும் மணிகண்டனை விசாரிக்க அழைப்பு விடுத்திருந்தார் ஏ.டி.எஸ்.பி சங்கர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தங்கள் வக்கீலுடன் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜரானார்கள். அவர்கள் யாரும் சாட்சி அளிக்காமல் ஒரு மனுவை மட்டும் ஏ.டி.எஸ்.பியிடம் கொடுத்து விட்டு வெளியேறினர்.

அப்போது அவர்களது வழக்கறிஞர் பாண்டியராஜன் நம்மிடம் கூறுகையில், ’’பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சம்பவம் நடந்து 50 நாட்கள் கழித்து தான் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மணிகண்டனை 5ம் தேதி ஆஜராக சொல்லி 3ம் தேதி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். சம்மன் வாங்க அவர் இல்லை. பெங்களூர் போய்விட்டார். எனவே அவரது தாயாரிடம் சம்மன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, நாங்கள் சாட்சியம் அளிக்கவில்லை. எங்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதால் ஏ.டி.ஜி.பி விசாரிப்பது சரியல்ல. அவருக்குப் பதிலாக ஐ.ஜி அல்லது டி.ஐ.ஜி அந்தஸ்தில் இருப்பவர்கள் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் சாட்சிகளுக்கு பயம் இருக்காது. தவிர, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால்தான் சாட்சிகள் தைரியமாக சாட்சி சொல்வார்கள் என்பதை எழுத்து பூர்வமாக ஏ.டி.எஸ்.பியிடம் கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com