நெல்லை அருகே கள் இறக்கியதாக கூறி பனையேறும் தொழிலாளி மீது போலீஸ் நடத்திய தாக்குதலில் காது ஜவ்வு கிழிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்,ஆணுர் அருகே இருக்கும் களக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி.பனையேறும் தொழிலாளியான இவர் அண்டை மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான் குளம் பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏறி அதன்மூலம் கிடைக்கும் பதநீரை கொண்டு கருப்பட்டி உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 17 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல காலையில் பனையேறி பதநீர் இறக்கியபோது அங்கு வந்த காவல்துறையினர் கள் இறக்கியதாகக் கூறி விசாரணைக்காகக் கயத்தாறு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். காலை ஏழு மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், இரவு 9 மணி வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த போது அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும், குறிப்பாக முதுகுப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையிலும், இடது காது கேட்கும் செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பனையேறும் தொழிலாளியான மாடசாமியும், அவரது மகனும் குற்றம்சாட்டி உள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து பனையேறும் தொழில் மேற்கொள்ளக்கூடாது என்று மிரட்டியதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,காவல்துறை தாக்கியதில் முதுகு பகுதி மற்றும் இடது காதில் கேட்கும் திறனுக்கான ஜவ்வு பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பனையேறும் தொழிலாளி மாடசாமி கடந்த 16 நாட்களாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.
பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக அழைத்துச்சென்று தவறான நடவடிக்கை காவல்துறை மேற்கொண்டுள்ளதாகவும், எனவே காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி சரகக் காவல்துறை துணைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.
தனக்கு நேர்ந்தது போன்று பிற பனையேறும் தொழிலாளர்களுக்கு இதுபோன்று நிகழ்வு நடைபெறக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பனையேறும் தொழிலாளி மாடசாமியை நேரில் சந்தித்த பனையேறும் தொழிலாளர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கள் இறக்குவதற்கு உரிய அனுமதியை தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.