நெல்லையில் செவிலியரை எரித்துக் கொன்ற கணவர் மன நோயாளி என்பதும் தெரிய வந்திருக்கிறது. அவர் தற்போது கீழ்பாக்கம் மன நல மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அய்யம்மாள் நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். பாலசுப்பிரமணியனுக்கும், அய்யம்மாளுக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டதால் அய்யம்மாள் கணவரைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவமனை அருகில் அண்ணாநகரில் வாடகை வீடு பிடித்து மகன்களுடன் குடியேறியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 4ம் தேதி இரவு 7மணிக்கு அய்யம்மாள் பணி முடிந்து வெளியே வந்திருக்கிறார். அங்கு கணவர் பாலசுப்பிரமணியம் பைக்கில் நின்றிருக்கிறார். பைக் பின் சீட்டில் ஏறிய அய்யம்மாளுடன் அண்ணாநகருக்குப் புறப்பட்டிருக்கிறார் பாலசுப்பிரமணியன்.
ஆனால் பைக்கில் போகும்போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் டென்சனான பாலசுப்பிரமணியன் சட்டென வண்டியை நிறுத்தி விட்டு, கத்தியால் அய்யம்மாளை சரமாரியாக குத்தியிருக்கிறார்.இதனால் நிலை குலைந்து தரையில் விழுந்தவரை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு சவகாசமாக அங்கிருந்து தப்பி இருக்கிறார்.
இது குறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகியிருக்கிறார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த நெல்லை போலீசுக்கு பயங்கர அதிர்ச்சி. மனைவியை ஏன் எரித்துக் கொன்றாய் என்று கேட்டதற்கு, ’’சாத்தான் சொன்னான். அதனால், கொன்றேன்’’என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை செய்ததில் பாலசுப்பிரமணியம் முஸ்லீம் மதத்திற்கு மாறி அக்பர் இப்ராகீம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளதும், இவர் ஒரு மன நோயாளி என்பதும் தெரிய வந்திருக்கிறது. அவர் தற்போது கீழ்பாக்கம் மனநல மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.