நெல்லை கூடங்குளம் அணுமின் உலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்கப்படுகிறது. தலா ஆயிரம் மெகாவாட் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கபப்ட இருக்கின்றன. முதல்கட்டமாய் இரண்டு அணு உலைகள் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. மீதி அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அணு உலை என்பதால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் அணு மின் நிலையத்தின் தென் புறம் உள்ள கூத்தங்குளி கிராம கடற்கரையில் ஏராளமான நாட்டு வெடிகுண்டு புதையலை போலீஸ் கண்டு பிடித்தது. அணு உலையை நாசம் செய்ய சதியா என்கிற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டது. ஆனால், அந்த வெடிகுண்டுகள் அணு உலையை குறி வைத்து அல்ல, கூத்தங்குளி கிராமத்தின் இரு கோஷ்டிகளூக்கு இடையேயான மோதலில் வீசப்படுவதற்காக வைக்கப்பட்ட குண்டுகள் என்று தெரியவந்தது.
கடந்த வாரம் கூந்தங்குளி தேவாலயத்தில் கொடி ஏறியிருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்லாமல் ஊரில் இருக்கிறார்கள். அங்கு நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள், வாள்கள் போன்ற ஆயுதங்கள் மறுபடியும் குவிக்கப்படுவதாய் செய்தி கிடைத்து இன்ஸ்பெக்டர் ஜாண் பிரிட்டோ தலைமையில் போலீஸ் படை கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குளி கிராம கடற்கரையில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். சுமார் மூன்று மணி நேர தேடுதலுக்குப் பின்னரும் ஆயுதங்கள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். தேடுதல் வேட்டை தொடரும் என்கிறது போலீஸ்.