தர்மபுரி: நீட் தேர்வு எழுத மாணவருக்கு அனுமதி மறுப்பு - என்ன காரணம்?

நீட் தேர்வு எழுத வந்த மாணவர் முழுக் கால்சட்டை அணியாததால் தேர்வு மையத்தின் அதிகாரிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை என்.டி.ஏ நடத்துகிறது. அந்தவகையில் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 5,437 மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதினர்.

காலை முதலே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு முன்பு குவிந்தனர். சரியாக 11:30 மணி முதல் மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டவாறு சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.

எஸ்.வி சாலையில் உள்ள இரண்டு தேர்வு மையங்களில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் இரண்டு பேர் டீசர்ட் மற்றும் முக்கால் பேண்ட் அணிந்து நீட் தேர்வு எழுத வந்தனர்.

அவர்களை சோதனை செய்த அதிகாரிகள் முழு பேண்ட் போட்டு வருமாறு அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்து வெள்ளி அரைஞாண் கயிறு இருக்கிறதா? என சோதனை செய்த பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

மேலும் மாணவிகளின் காதில் உள்ள தோடுகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அடுத்து பல மாணவிகள் தங்களது காதுகளில் அணிந்து இருந்த தோடுகளை பெற்றோரிடம் கழட்டி ஒப்படைத்துவிட்டு சென்றனர்.

தலைமுடியை அலங்கரித்து வந்த மாணவிகள் தலைமுடி பின்னலை அவிழ்த்துவிட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமானோர் தங்களது வாகனங்களில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களை அழைத்து வந்ததால் தேர்வு நடந்த பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com