195 நாடுகளின் தேசிய கொடி: முழு விவரம் கூறும் 7 வயது சிறுவன்- உலக சாதனை படைத்து அசத்தல்

தஞ்சாவூரில் 7 வயது சிறுவன் ஐ.நா. அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தேசியக் கொடிகளை பார்த்து நாட்டின் பெயர், தலைநகர் மற்றும் அவற்றின் நாணயத்தை கூறி உலக சாதனை
சிறுவன் நிவின் பங்கஜ்
சிறுவன் நிவின் பங்கஜ்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை சரபோஜி கல்லூரி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், இவரது மனைவி வைஷ்ணவி, இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7). வினோத்குமார் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் நிவின் பங்கஜ் அங்கு 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து பள்ளி விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான தஞ்சைக்கு வினோத்குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் கடந்த 8 மாதங்களாக ஐ.நா-வால் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தேசிய கொடிகளை பார்த்து அந்த நாடுகளின் பெயர், தலைநகரம், மற்றும் நாணயம் போன்றவற்றை மிக குறைந்த நிமிடத்தில் சொல்வதற்கு பயிற்சி எடுத்துள்ளார். இதை பார்த்த வினோத்குமார் இதை வீடியோவாக பதிவு செய்து சோழன் உலக சாதனை புத்தக அமைப்பிற்கு அனுப்பினார். தொடர்ந்து இதை ஆய்வு செய்த சோழன் உலக சாதனைப் புத்தக அமைப்பினர் இந்த சாதனையை பதிவு செய்ய ஒப்புதல் அளித்தனர்.

சாதனை படைத்த சிறுவன் நிவின்
சாதனை படைத்த சிறுவன் நிவின்

அதை தொடர்ந்து இந்த சாதனை நிகழ்வு தஞ்சையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்டப் பொதுத் தலைவர் முனைவர் சந்தானசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இவர்கள் முன்னிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் 5.53 விநாடியில் 195 உலக நாடுகளின் பெயர், தலைநகரம், மற்றும் நாணயம் ஆகியவற்றை சரளமாக கூறி சாதனை படைத்தார்.

விருது, பதக்கங்களுடன் நிவின்
விருது, பதக்கங்களுடன் நிவின்

அதையடுத்து இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையாக சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டது, பள்ளி மாணவர்கள் இது போன்று சாதனை படைக்க வேண்டும், இதைபற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறுவன் நிவின் பங்கஜிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com