தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பழிவாங்கும் வகையில் தீட்சிதர்கள் மீது சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதுபோல் திருமணங்கள் நடக்கவில்லை. ஆனாலும் அவர்களது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அரசால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்தனர்.
எனவே, அந்த சிறுமிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு நான் கடிதம் எழுதினேன்’ என, ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
இந்த நிலையில் தீட்சிதர் குடும்பச் சிறுமிகளுக்கு கன்னித் தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ரவி அளித்த பேட்டியின் அடிப்படையில், தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.