நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் உள்ள கூனவேலம்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு வேலை நாளில் புகார் கொடுக்க பொதுமக்கள் சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு மாலை அணிவித்து வாழைப்பழங்கள் வைத்து கற்பூரம் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூனவேலம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த சாந்தி ஆறுமுகம் உள்ளார். ஊராட்சி செயலாளராக ராமன் என்பவர் உள்ளார்.
கூனவேலம்பட்டி ஊராட்சியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை கடந்த ஒரு வருடமாக அகற்றாததை கண்டித்தும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுக்க வந்துள்ளனர்.
வேலை நாட்களிலும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டி கிடந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அலுவலகத்திற்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள் புகார் மனுவை அலுவலக வாசலில் வைத்துவிட்டுச் சென்றனர்.