நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்குச் சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
மேலும் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்களில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மற்ற இரு தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். காயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்து தடயங்களைச் சேகரித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மண்ணெண்ணெய் ஊற்றி குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி பட்டதாரி பெண் நித்தியா ஆடு மேய்க்கச் சென்றபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.
இந்தநிலையில் போலீசார் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனக் கூறி ஒரு சமூகத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இரு சமூகத்தினரிடையே மோதலாக வெடித்துள்ளது.
இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கொட்டகை மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு குடில்கள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. அதற்கு மாறாக மற்றொரு சமூகத்தினர் சார்ந்த ஆலைக் கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது பெட்ரோல் குண்டு வீசுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த குற்றம் நடந்த சம்பவ இடத்தில் கோவை மண்டல ஐ.ஜி, சேலம் மண்டல டி.ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி மற்றும் ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.