பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனத்திற்கு நேற்றிரவு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அருகிலுள்ள 88 ஏக்கர் பரப்பளவில் உள்ள பள்ளாபாளையம் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் ஏரியில் விஷ மருந்து கலந்திருக்ககூடுமோ? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி பட்டதாரி பெண் நித்யா ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு அப்பகுதி பொது மக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக மோதல் நீடிக்கிறது. வெல்ல ஆலை கொட்டகை, வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புகள், அதற்கு பயன்படக்கூடிய டிராக்டர்கள் வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பது என ஒரு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மாறாக மற்றொரு சமூகத்தினர் சார்ந்த ஆலை கொட்டகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீ வைப்பது பெட்ரோல், மண்ணெண்ணை குண்டு வீச்சு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு ஜேடர்பாளையம் அடுத்த வடகரை ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. தீ எரிவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மீதமுள்ள இரண்டு வாகனத்தை தள்ளிவிட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஒரு வாகனம் மட்டும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஜேடர்பாளையம் பகுதியில் தீ வைப்பது, பெட்ரோல், மண்ணெணை குண்டு வீச்சு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பள்ளி வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தி இருந்தது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜேடர்பாளையம் அருகே உள்ள 88 ஏக்கர் பரப்பளவில் உள்ள பள்ளாபாளையம் ஏரியில் திடீரென ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த குத்தகைதாரர் ராஜு மீன்வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இப்பதியில் தொடர்ச்சியாக அசம்பாவிதங்கள் நடைபெற்று வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.